இளம் இசைப்பிரியர்களின் இதயங்களை கவர்ந்த பாடகர் ஜஸ்டின் பீய்பர் தனது புதிய இசை வௌியீடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது குடும்ப மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த வேரூன்றிய பிரச்சினைகள் காரணமாக தன்னால் திறம்பட செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்கள் முதல் பெரும் பிரபலங்கள் வரை இந்த காலகட்டத்தில் பிரச்சினைகள் தோன்றுவது வழக்கமாகி விட்டது. எனினும், அவரிடம் இருக்கின்ற நம்பிக்கைகள் அவரை வீழ்ச்சியிலிருந்து தடுப்பதாக ஜஸ்டின் பீய்பர் கூறியுள்ளார்.
தனது 106 மில்லியன் பின்பற்றாளர்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ள பீய்பர் “இசை எனக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று, ஆனால், என் குடும்பம் மற்றும் உடல் நலத்திற்கு முன்னால் வேறு எதனையும் நிகராக கருத முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் தற்போது வேரூன்றியுள்ள பிரச்சினை சீர்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறேன். என்னிடம் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே நான் தனிமைப்பட்டு வீழ்ச்சியடைந்து விட மாட்டேன், அத்துடன் நான் எனது திருமணத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், தந்தையாகும் விருப்பமும் நிறைவேறும்” என்று பாடகர் ஜஸ்டின் பீய்பர் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் பீய்பர் இந்த மாத ஆரம்பத்திலிருந்தே சற்று கவலை தோய்ந்த பதிவுகளையே இட்டு வருகிறார். 15 வயதில் குழந்தை பாடகராக அறிமுகமாகிய அவர், சிறிது காலத்தில் பல கோடி நேயர்களை கவனத்தை ஈர்த்தார்.
எனினும், கடந்த சில காலங்களாக வௌியில் கூற முடியாத பிரச்சினைகளால் அவர் அவதியுற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் மொடல் அழகி ஹெய்லி போல்ட்வின்னை நியுயோக்கில் வைத்து மணந்ததுடன், இன்னும் அவர்களுக்கு குழந்தை பேறு ஏற்படவில்லை.
அத்துடன், “Purpose” என்ற பெயரில் சர்வதேச இசை சுற்றுப்பயணத்தையும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திட்டமிட்டிருந்ததுடன் அது முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.