கடந்த சில நாட்களாக ‘செளகிதார்’ என்ற வார்த்தையை இந்திய மக்கள் அனைவரும் கேள்விப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.
மேலும் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை உட்பட பா.ஜ.க. பிரபலங்கள் பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் செளகிதார் தான்’ என்று பதிவு செய்து வருகின்றனர்.
செளகிதார் என்றால் பாதுகாவலன் என்ற பொருள்படுகிறது. இதனால் நாட்டின் பாதுகாவலர்களாக இவர்கள் தங்களை அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ‘வாட்ச்மேன்’ படக்குழுவினர் தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
‘வாட்ச்மேன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நாய் ஒன்றின் வாயில் ஓர் பதாதை உள்ளது. அதில் ‘நானும் செளகிதார் தான்’ என்ற வாசகமும் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு விருந்தாக வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு, ராஜ் அர்ஜூன், சக்யுக்தா ஹெக்டே உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தை டபிள்மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.V