தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பாடல்களில் முதல் முறையாக மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் 100 மில்லியன், அதாவது 10 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்பட பாடல் வீடியோவும் 100 மில்லியனைக் கடந்ததில்லை. மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப் போறான் தமிழன் பாடல்தான் இதுவரையில் 9 கோடிக்கு சில லட்சம் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்தப் பாடல் யு டியூபில் வெளியாகி 14 மாதங்கள் ஆகிறது. ஆனால், மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் 100 மில்லியன் சாதனையை வெறும் 18 நாட்களில் படைத்து புரிந்துள்ளது.
மாரி படத்தின் முதல் பாகத்தில் அனிருத் இசையில் வெளிவந்த டானு டானு பாடல்தான் யு டியூபில் முதலில் 5 கோடி பார்வைகளைக் கடந்த பாடலாக இருந்தது. அந்த சாதனையை பின்னர் மெர்சல் படத்தின் ஆளப் போறான் தமிழன் முறியடித்தது.
மாரி 2 படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை என்றதும் அனிருத் ரசிகர்கள், அனிருத் – தனுஷ் கூட்டணி போல மாரி வருமா என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். அதை முறியடித்து யுவன் – தனுஷ் கூட்டணி மாரி 2 ரௌடி பேபியில் அதை விடவும் இரண்டு மடங்கு சாதனையைப் புரிந்திருக்கிறது.
அன்று கிண்டல் செய்தவர்கள் இன்று எங்கே போனீர்கள் என யுவன் ரசிகர்கள் பதிலுக்கு அனிருத் ரசிகர்களைக் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். மாரி டானுக்கும், மாரி 2 ரௌடிக்கும் இடையே அனிருத், யுவன் ரசிகர்கள் புதிய சண்டையை மூட்டிவிட்டுள்ளார்கள்.