இப்போதெல்லாம் வெற்றியடையாத படத்துக்கு கூட வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துடன் மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியானதால் கணிசமான திரையரங்குகளே கிடைத்தன. இருப்பினும் வெளியான ஒருசில நாட்களில் கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகள் உயர்த்தப்பட்டன.
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று படம் வெற்றியடைந்திருப்பதால் படக்குழு நேற்று வெற்றி விழா கொண்டாடியது. விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், “குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்தப் படம் வெற்றி பெற காரணமாக இருந்த அனைவருக்குமே நன்றி. பெண்ணை மையமாக வைத்து கிரிக்கெட் படம் எடுக்கும் போது, அதுவும் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பல விஷயங்கள் யோசிப்பார்கள். இந்தப் படத்தில் என் மீது நம்பிக்கை வைத்த சிவகார்த்திகேயன், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு முதல் நன்றி. இவர்கள் தான் என்னை முழுமையாக நம்பினார்கள்.
என் வாழ்க்கையில் எனக்கு அப்பா இல்லாததது ஒரு குறையாக தெரியவில்லை. ஏனென்றால் எனது அம்மா என்னை அப்படித்தான் வளர்த்தார். ஹீரோயின்களுக்கு சினிமாவில் குறைவான காலம் மட்டுமே கிடைக்கும். அதனால் என்ன படம் வந்தாலும் நடிக்க வேண்டும் என்று கூறுவார் எனது அம்மா. ஆனால் கனா பார்த்துவிட்டு நீ படமே நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிறார் இப்போது. இந்தப் படம் உனது சினிமா வாழ்க்கைக்கு போதும் என்கிறார். அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு” என்றார்.
தொடர்ந்து படக்குழுவினரின் பெயரைக் கூறி நன்றி தெரிவித்த அவர், இப்போதெல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். உடனே சிவகார்த்திகேயன் எழுந்து நின்று கொஞ்சம் கீழே வந்து விடு என்று நகைச்சுவையாக கூறினார். அப்போது அங்கிருந்த நிகழ்ச்சிக்குழுவினர் “ஒரு தென்றல் புயலாகி வருதே” என்ற பாடலை ஒலிக்க விட்டனர். இதனால் அரங்கமே சிரிப்பலையில் ஆர்ப்பரித்தது.ஐஸ்வர்யா ராஜேஷைத் தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், “ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பேசியதைத் தவிர அவரது பேச்சை நான் ஆமோதிக்கிறேன்” என்றார்.