தமிழில் வர்ணம், கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், படம் பார்த்து கதை சொல், வனயுத்தம் ஆகிய படங்களில் நடித்தவர், பாவனா ராவ். 2017ல் கன்னடத்தில் வெளியான சத்ய ஹரிச்சந்திரா என்ற படத்தில் நடித்ததற்காக விருது பெற்ற அவர், தற்போது சிவராஜ் குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிக்கும், தி வில்லன் என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில் அவர், நீல் நிதின் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பைபாஸ் ரோட் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து பாவனா ராவ் கூறுகையில், ‘கன்னடத்தில் அதிக படங்களில் நடித்தாலும், இந்தி மற்றும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக காத்திருந்தேன். இப்போது நமன் நிதீஷ் இந்தியில் இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். சொகுசாக வாழ விரும்பும் ஒரு பெண், அதற்காக சில குறுக்குவழிகளில் சவாலுடன் பயணிக்கிறாள். அப்போது சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது’ என்றார்.