அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சில பகுதிகளின் விநியோக உரிமைகள் விற்பனையாகி வருகின்றன.
அஜித் நடித்துள்ள மற்றப் படங்களைக் காட்டிலும் விஸ்வாசம் படத்திற்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உருவாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில் செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் நிறுவனம் விநியோக உரிமையைக் கைப்பற்றி அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ‘ஸ்பேஸ் பாக்ஸ்’ என்ற நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. முன்னதாக இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்தது.
தமிழக விநியோக உரிமையை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்கெனவே வாங்கியிருந்தது. இந்நிலையில் திருச்சி, தஞ்சாவூர் விநியோக உரிமையை மட்டும் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
“அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் படத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் நாங்களும் இணைந்தது பெருமையாக உள்ளது. தஞ்சாவூர், திருச்சி விநியோகப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளோம். பிரம்மாண்ட வெளியீட்டை எதிர்பார்க்கிறோம்” என்று தங்கள் பதிவில் தெரிவித்துள்ளனர்.
சக்தி பிலிம் ஃபேக்டரி கடந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம், கீதா கோவிந்தம் ஆகிய இரு வெற்றிப்படங்களை விநியோகித்தது. பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தின் உரிமையை ஈ 4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அப்படம் பிப்ரவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.