சேட்டிலைட் சேனல் அறிமுகமான காலத்தில் மக்களிடம் பிரபலமாகத் தொடங்கியவர்கள், சாண்ட்ரா மற்றும் ப்ரஜின். மலையாள சேனலில் ஆங்கராக இருந்த சாண்ட்ராவுக்குத் தமிழில் அதிகப்படியான ரசிகைகளைக் கொண்ட ஆங்கர் ப்ரஜின் மீது காதல். பிடித்த பாடலைக் கேட்டு போன் செய்ததில் தொடங்கிய அறிமுகம், நட்பாகி பின் காதலாகி இருவரையும் கணவன் மனைவியாக்கியது.
திருமணத்துக்குப் பிறகு இருவருமே சினிமாவுக்கு முயற்சி செய்தனர். சில படங்களில் நடித்தனர். தற்போது வரை இவர்களின் சினிமா பயணமும், முயற்சியும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
2018 – இந்தத் தம்பதியின் வாழ்வில் மகிழ்ச்சியின் கதவைத் திறந்துவிட்டிருக்கும் ஆண்டாகவே கடந்து சென்றிருக்கிறது. ஏனெனில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2017- ம் ஆண்டின் இறுதியில் `சின்னத்தம்பி’ சீரியல் மூலம் மறுபடியும் சின்னத்திரைக்கு வந்தார், ப்ரஜின். இந்தாண்டு அதிகம் பேசப்பட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில், `சின்னத்தம்பி’யும் ஒன்று. `ப்ரஜின் அப்படியே இருக்காப்ல!’ எனப் பாசம் காட்டி ஆதரவு தந்தார்கள், சீரியல் ரசிகர்கள். ஆம், தொடருக்காக மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார், ப்ரஜின்.
பிறகு, `தலையணைப் பூக்கள்’ சீரியல் மூலம் சாண்ட்ராவின் செகண்ட் இன்னிங்ஸ் இனிதே தொடங்கியது. `தலையணைப் பூக்களுக்’குப் பிறகும் சீரியல் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனாலும், தற்போது வரை எந்த சீரியலிலும் கமிட் ஆகவில்லை. சில பெர்சனல் காரணங்கள் எனத் தெரிகிறது. ஆனால், சினிமா வாய்ப்புகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜே-வாக மக்களிடம் அறிமுகமான சாண்ட்ராவை ஆர்ஜே-வாகக் காட்டி அழகு பார்த்தது, சமீபத்தில் வெளியான `காற்றின் மொழி’ திரைப்படம். இந்தப் படம் பரவலான வரவேற்பைப் பெற்றதில், சாண்ட்ராவும் ஹாப்பி. அடுத்து, பாலாவின் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 2019-ல் வெளியாக இருப்பதாகச் சொல்கிறார். தவிர, வைபவ்வுடன் முக்கிய ரோலில் நடித்திருக்கும், `டானா’ படமும் தயார்.
ப்ரஜினிடம் பேசினோம்.
“சினிமா முயற்சியில் வருடங்களை வீணாக்கிட்டதா எப்போவுமே நினைச்சதில்லை. நான் வொர்க் பண்ண படங்கள் நல்லபடியாகவே வந்தன. `பழைய வண்ணாரப்பேட்டை’ படம் ஹிட் ஆகும்னு நம்பியிருந்தேன். ஆனா, அந்தப்படம் வெளியான மறுநாள் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா இறந்ததால, படம் வெளியே தெரியாமலேயே போயிடுச்சு. இப்போவும் எதுவும் கடந்து போயிடல. `சின்னத்தம்பி’ மூலமா எப்படி சின்னத்திரை மறுபடியும் ஆதரவு தந்துக்கிட்டு இருக்கோ, அதுமாதிரி தமிழ் சினிமாவும் என்னை மறுபடியும் வரவேற்கும்னு நம்புறேன். 3 படங்கள் ரிலீஸுக்கு ரெடி, பார்க்கலாம். சாண்ட்ராவும் சினிமா, சீரியல் ரெண்டுலேயும் கவனம் செலுத்துவாங்க.” என்றவர், அடுத்து சொன்னது ஹைலைட்.
“டிவி மூலமா மக்கள்கிட்ட நாங்க அறிமுகமானோம். அதே டிவி எங்களை வாழ்க்கையிலேயும் இணைச்சது. அந்தநாள்ல இருந்தே, `நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலையா?’ங்கிற கேள்வியை நாங்க ஃபேஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். `நாளைய இயக்குநர்’ டிவி ஷோ மூலமா வந்த ஒரு புதுமுக இயக்குநர், நாங்க ஜோடியா நடிக்க ஒரு குறும்படம் எடுத்தார். அதைப் பார்த்துட்டு, இயக்குநர் பாண்டிராஜ் எங்களைக் கூப்பிட்டு, `படம் பண்ணலாம்’னு சொன்னார். பேச்சுவார்த்தைகள் நடந்தது. பிறகு என்னாச்சோ தெரியல… அந்த முயற்சி கைகூடலை. பின்னாடி, அந்தக் கதைதான் `பசங்க 2′ படமா வந்ததா கேள்விப்பட்டேன். பெருசா எடுத்துக்கல. மறுபடியும் சந்தர்ப்பம் வரும்னு நம்பினோம். அந்த நாளும் வந்தது. இயக்குநர் பிரபு சாலமன் சாரோட அசோசியேட், பால் என்பவர் இயக்கத்தில் நாங்க ரெண்டுபேரும் நடிச்சிருக்கோம். அந்த நாள்கள் வித்தியாசமான அனுபவங்களைத் தந்தன. அதுக்காகவே, இந்த வருடத்துக்குப் பெரிய தேங்க்ஸ் சொல்லணும். த்ரில்லர் கதை அது. அதைவிட, ரியல் லைஃப்ல நாங்க எப்படி வாழ்கிறோமோ, அப்படியான கேரக்டர்தான் ரெண்டுபேருக்கும். அதனால, இந்தப்படம் எங்க கரியர்ல முக்கியமான மைல்கல்லா இருக்கும்னு நம்புறோம்.”; என்கிறார்.
இருவருக்கும் வாழ்த்துகள்!