‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் இணைந்து ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.
அஜித் நடிப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’.
அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸாகிறது. நயன்தாராவின் ‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ், ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அஜித் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுதான் முதல்முறை.
இந்தப் படத்தின் முதல் பாடல் கடந்த 10-ம் தேதி வெளியானது. ‘அட்ச்சி தூக்கு’ என்ற இந்தப் பாடலை விவேகா எழுத, டி.இமானே பாடியுள்ளார்.
இந்தப் பாடலுக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், விரைவில் இரண்டாவது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் பாடலை, ‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டில் வென்ற மக்கள் இசைக் கலைஞன் செந்தில் கணேஷும், அவருடைய மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடியுள்ளனர்.