நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இத்திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவலை இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடிக்க உள்ளதாகவும் இவர் ஏற்கனவே ஆரவ் நடித்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். காவ்யா தாப்பர் தெலுங்கு படமான ஈ மாயா பெரெமிடோ மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் காவ்யா கல்லூரி மாணவியாக நடிக்க இருப்பதாகவும் இது ஒரு வித்தியாசமான கதாபாத்திர்ம் என்பதால் புதுமுக நடிகை ஒருவரை தான் தேடி வந்ததாகவும், காவியா மிகப் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு அரசியல் கலந்த ஆக்சன் த்ரில் படம் என்றும் இதுவரை கூறாத வித்தியாசமான திரைக்கதை இந்த படத்தில் தான் முயற்சித்துள்ளதாகவும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையும், ஒளிப்பதிவு என்.எஸ். உதயகுமாரும் இணைந்துள்ளனர்.
இந்த படம் எமனுக்குப் பிறகு விஜய் ஆண்டனியின் இரண்டாவது அரசியல் திரில்லர் படமாகும்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் ‘கொலைகாரன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.