வளிமண்டலத்தில் நீர், காற்றுபோல இசையும் இருக்கின்றதென இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 1000இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும், இசையமைத்தும் சாதனை படைத்தவராவார்.
இவரின் ஜனனதினம் அண்மையில் கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் இளையராஜா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “வளிமண்டலத்தில் நீர் காற்றுபோல இசையும் இருக்கிறது. அந்த அதிர்வலைகளை எனது மூளையால் தொடமுடிந்தது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையையும் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். இசைக் கலைஞர்களால் உருவாக்கப்படும் இசைக்கே ஆற்றல் அதிகம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தன்னுடைய வாழ்க்கை குறித்த சுயசரிதையை எழுதவுள்ளதாகவும் விரைவில் அதனை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.