இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலே கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவிப்பதாவது, ”நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர். பண்பாடு மிக்க, மனிதநேயமிக்க மனிதர். நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும் சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர்.
முத்துயா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர்” என ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இந்தப்படத்துக்கு ‘800’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்கவிருக்கின்றார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று, அடுத்த 2020 ஆம் ஆண்டின் கடைசியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.