விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் முரணான காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை நீக்காவிட்டால் பயங்கர விளைவுகளை படக்குழு எதிர்கொள்ள நேரிடுமென அதிமுக எச்சரித்திருந்த நிலையில் சர்கார் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தையும் நீக்குவதாக படத்தயாரிப்பு குழு பதிலளித்ததுடன், குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதற்கான சென்சார் பணிகளும் தற்போது நடைபெறுகின்றன.
அரசினது செயற்பாடுகளை விமர்சிக்காமல் நேரடியாக தங்களது தலைமை குறித்து விமர்சித்த காரணத்தினால் அதிருப்தியடைந்த அதிமுக தலைமை, சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும் . முதலில் இவ்வாறான நடிகர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென விரும்பிய நிலையிலேயே தமிழக முழுவதும் சர்கார் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
நிலைமை தொடர்ச்சியாக விபரீத நிலையினை எட்டியுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வருத்தம் அல்லது மன்னிப்பு கோருவதற்காக விஜய் தரப்பு நேரம் கேட்டிருந்த நிலையில், அதிமுக தலைமை இச்சந்திப்பினை விரும்பவில்லை எனவும் அப்படியான சந்திப்பு இந்த நேரத்தில் தேவையற்றது என கருதுவதாகவும் அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.