மம்மூட்டி நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ளது பேரன்பு திரைப்படம். தந்தை மகள் பிணைப்பை பெருமைப்படுத்திய தங்கமீன்கள் படத்திற்கு பிறகு ராமின் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் எப்படி? வாருங்கள் பார்ப்போம்.
கதை:
அமுதவண்(மம்மூட்டி) தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை பேரன்பு என்கிற புத்தகத்தில் எழுதி, அதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயங்களையும் நமக்கு சொல்வது போல துவங்குகிறது படம்.
வெளிநாட்டில் டாக்ஸி டிரைவராக பணியாற்றும் மம்மூட்டி. ஒரு சமயத்தில் அவரது மனைவி மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்.
சமூகத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தனியான கொடைக்கானலில் ஒரு இடத்திற்கு மகளை கூட்டி சென்று வளர்க்கிறார்.
அவர் வயதிற்கு வந்த பிறகு ‘நான் ஒரு பெண். அப்பா ஒரு ஆண்’ என உணர துவங்கி விலகி நிற்கிறார்.
சொந்த தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத பெண், அவளது பருவ உணர்வுகள் என இயற்கையாக வரும் சோதனைகளை சற்று உணர்வுபூர்வமான கிளைமாக்ஸோடு காட்டியுள்ளது பேரன்பு.
படத்தை பற்றிய அலசல்:
தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் மம்மூட்டி. சாதனா நடிப்பில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பர்பார்ம் செய்துள்ளார்.
அஞ்சலி வருவது 20 நிமிடங்கள் மட்டும் தான் என்றாலும் தன் எதார்த்த நடிப்பால் கவர்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளரின் பணி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பிரமாதமாக உள்ளது. இயற்கை காட்சிகள் மற்றும் குறைந்த ஒளியில் உள்ள பல காட்சிகளில் அதிகம் கஷ்டப்பட்டுள்ளனர்.
க்ளாப்ஸ்:
-மம்மூட்டி, சாதனாவின் நடிப்பு.
-இதுவரை சொல்லப்படாத ஒரு உணர்ச்சிபூர்வமான கதை
-யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. இருப்பினும் நா.முத்துக்குமார் பாடல்களை நிச்சயம் ரசிகர்கள் மிஸ் செய்வார்கள்.
பல்ப்ஸ்:
இப்படி உணர்வுபூர்வமான கதையை கொண்ட படங்களுக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும், கமெர்சியலாக படம் எதிர்பார்த்து வருபவர்களுக்கு மெதுவாக செல்லும் பேரன்பு சற்று ஏமாற்றத்தை கொடுக்கலாம்.
மொத்தத்தில் பேரன்பு கொண்டாடப்படவேண்டிய ஒரு படைப்பு.