கோமாளி படத்தை பற்றி சொல்லுங்கள்?
ஆக் ஷன், ரொமான்ஸ், சென்டி மென்ட் என அனைத்தும் அழகாக கலந்த கலவையாக, கோமாளி இருக்கும். அது தான், இப்படத்தின் அழகு. நான் இதுவரை நடிக்காத படம். அனைவரும் பார்த்து சிரிக்கவும், சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கும்.
படத்தில் என்ன கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்?
நம் மொத்த வாழ்க்கையின் அனுபவத்தையும், ஒரே நாளில் அனுபவித்தால் எப்படி இருக்கும்; அது தான் கோமாளி. எது எப்படி இருந்தாலும், மனித உணர்ச்சி மாறாமல் இருக்கிறது என்ற அழகான எமோஷன் தான், கோமாளி. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, படத்தின் க்ளைமாக்ஸாக வைத்து உள்ளோம்.
10 படத்தின் உழைப்பை, ஒரே படத்தில் கொடுத்துள்ளீர்களே, இதனால் உங்களை அடுத்து இயக்கும் படைப்பாளிகளுக்கு அது கஷ்டமாக இருக்காதா?
என் முதல் படமே, 10 படத்திற்கு சமமாக தான் இருந்தது. அடுத்தடுத்து வந்த, என் ஒவ்வொரு படமும் அப்படித் தான் இருந்தது. சவால்களை சந்தித்து தான், முன்னுக்கு வரவேண்டி உள்ளது. எனக்கான நல்ல கதைக்கு, இயக்குனர்களும் கஷ்டப்படட்டும். எனக்கான ஆசையும் அது தான்.
கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்?
மூன்றுமே எனக்கு தராசு மாதிரி தான். இம்மூன்றுமே சிறப்பாக இருக்க வேண்டும். நல்ல கதை இல்லையென்றால், சிறந்த இயக்குனரால் ஒன்றும் செய்ய முடியாது. இவை இரண்டும் சிறப்பாக இருந்தாலும், திறமையான தயாரிப்பாளர் இருக்க வேண்டும்.
கோமாளி படத்தில் மாணவனாக நடிக்க, உடல் எடையை எவ்வளவு குறைத்தீர்கள்?
ஆமாம். கடுமையான உடற்பயிற்சி மூலம், 18 கிலோ வரை குறைத்தேன். பள்ளி மாணவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டு நிமிடம் மட்டுமே வந்தால், வேறு யாராவது நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், 15 நிமிடங்கள் வரும் போது, நானே நடிப்பது தான் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். கதைக்கும் மிகவும் அவசியமாகவும் இருந்தது.
உங்கள் மகனுக்கு நிறைய வாய்ப்பு வந்ததே?
ஆமாம், அவனுக்கு, 25 படங்கள் வரை வாய்ப்பு வந்தது. முதலில் படிக்கட்டும், அதுவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என, மீண்டும் நடிக்க வைக்கவில்லை.
ரசிகர்களின் ரசனையை எந்தளவு புரிந்து வைத்து படங்களை தருகிறீர்கள்?
இரண்டு விஷயம் தான் சார். ஒன்று யோசிக்க வைக்க வேண்டும். மற்றொன்று சிரிக்க வைக்க வேண்டும். கோமாளி சிரிக்க வைக்கும். யோசிக்க வைக்கும் காட்சிகளும் இருக்கிறது. என் மூளைக்கு வேலை கொடு அல்லது சிரிக்க வை; இது தான் ரசிகர்கள். பாட்டு, சண்டை, காதல், சென்டிமென்ட் என, அனைத்தும் கலந்த ரெகுலர் படங்கள், தற்போது குறைந்து வருகிறது. அதெல்லாம் சரியான கலவையில் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும்.
உங்கள் பார்வையில் யார் கோமாளி?
யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால், அவனை கோமாளியாக பார்க்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன், பாட்டிலில் தண்ணீரை அடைத்து விற்பர் என சொல்லியிருந்தால், நாம் சிரித்து இருப்போம். ஆனால், அது இன்று எப்படி நடந்தது என்றே தெரியவில்லை.இதை கேள்வி கேட்பவன் கோமாளியாக தெரிவான். இது, நியாயமான நடக்கக்கூடாத விஷயம் தான். ஆனால், நடந்த பின் கேள்வி கேட்டால், மாறியவன் கோமாளியா அல்லது கேள்வி கேட்டவன் கோமாளியா என்பது தான் விஷயம்.
குடும்பத்தாருடன் படம் குறித்து விவாதம் செய்வீர்களா?
கண்டிப்பாக; சின்ன வயதில் இருந்தே இதை செய்கிறோம். அப்பா, எங்களிடம் ஏதாவது ஒரு காட்சியை கூறி, எழுதி வரச் செய்வார். அது பிடித்திருந்தால், சினிமாவில் வைப்பார். அவ்வாறு வைக்கும் போது, அந்த காட்சிக்கு கைதட்டல் கிடைத்தால், அதை வீட்டில் அனைவரிடமும் கூறி, அப்பா பெருமைப்படுவார்.
சர்வதேச அளவிலான படங்கள் தமிழில் குறைவா?
ஈரான், பிரேசில் போன்ற நாடுகளில், அவர்களின் மக்கள் பார்க்க வேண்டும் என, படம் எடுப்பதில்லை. அந்நாட்டு மக்களை பற்றி, உலக மக்கள் பார்க்க, படம் எடுப்பார்கள். நாமும், நம் மக்களுக்காக படம் எடுக்காமல், மக்களைப் பற்றி படம் எடுக்கும் போது பேசப்படுவோம். கூடிய சீக்கிரம் தமிழ் படங்களும் உலகளவில் பேசப்படும்.
பொன்னியின் செல்வன், சங்கமித்ரா படங்கள் குறித்து?
பொன்னியின் செல்வன் குறித்து, நான் எதுவும் இப்போதைக்கு பேச முடியாது. அது, அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். சங்கமித்ரா படம், சில பிரச்னைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பேசினால் தான் எங்களுக்கே தெரிய வரும்.
உங்களின் கனவு படம் எது?
அப்படி எதுவும் இல்லை. அதை எடுத்து விட்டால், அடுத்த படம் எடுக்க முடியாமல் போய்விடும். என் ஒவ்வொரு படத்தையும், முதல் படமாக நினைத்து தான் வேலை செய்கிறேன். எதிர்காலத்தில் மூன்று படங்களாவது இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
பொது விஷயங்களில் உங்கள் ஈடுபாடு எந்தளவு?
நான் செய்கிற விஷயம் வெளியே தெரிவது எனக்கு பிடிக்காது. அது தேவையில்லாதது. அதே போல் சினிமா பிரச்னைகளை, மைக் போட்டு, பேசவும் எனக்கு பிடிக்காது. பிரச்னைகளை மறக்கவே ரசிகர்கள் சினிமாவுக்கு வருகின்றனர்; அந்த சினிமாவே பிரச்னையாக இருந்தால் எப்படி?