தமிழ்த் திரையுலகத்தில் இதற்கு முன்பு இப்படி ஒரு போட்டி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், இன்றைய இளம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது.
ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ள இந்த இரண்டு படங்களின் முன்பதிவு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கெனபே பிரி-புக்கிங் முறையில் முன்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தற்போது கூடுதலாக பல தியேட்டர்கள் அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளன.
படம் வெளியாகும் ஜனவரி 10ம் தேதியன்று பெரும்பாலும் அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் இரண்டு படங்களுக்கும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஆனால், அதற்கடுத்த நாட்களில் இருந்து இரண்டு படங்களுக்குமான டிக்கெட்டுகள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட 25 சதவீத அளவிற்குத்தான் முன்பதிவு நடந்துள்ளது.
இது குறிப்பாக சென்னை மாநகரில் முன்பதிவு ஆரம்பமாகியுள்ள தியேட்டர்களின் நிலவரம். சென்னையில் வசிப்பவர்களில் பலர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நிலை இருக்கவும் வாய்ப்புள்ளது.
படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் இந்த முன்பதிவுக்கான வேகம் அதிகமாகலாம்.