நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதிலிருந்து அரசுக்கு எதிரான கருத்துக்களையும், பொதுவான சமூக கருத்துக்களையும் கூறி வருகிறார். இந்த நிலையில் அவர் இந்துக் கடவுள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த வக்கில் கிரண் என்பவர் அனுமந்த் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருப்பதோடு, பெங்களூரு 4வது குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், கடந்த சில மாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசும்போது, இந்து மதத்தையும், அதன் கடவுள்கள், வழிபாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்துக்கள் கடவுளாக போற்றி வணங்கும் பசுவையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருகிறார். அவரின் பேச்சும், செயல்பாடும் கோடிக்கணக்கான இந்துக்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் மனங்களை காயப்படுத்தும் வகையில் பேசி வரும் பிரகாஷ்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.