தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகிய, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் முடிந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்துவரும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.
இதில் நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகின்றார்.
சென்னை உள்ளிட்ட பலபகுதிகளில் நடந்துவந்த படப்பிடிப்பு நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்துள்ளது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர்.
இதுகுறித்து இயக்குநர் அதியன் ஆதிரை கருத்து தெரிவிக்கையில், “திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கின்றோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கின்றோம். விரைவில் இதன் ஏனைய பணிகள் தொடங்க இருக்கின்றது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இத்திரைப்படம் இருக்கும்” என்று கூறினார்.