2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முடிந்து 37 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை வாக்குகள் எண்ணப்படவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.
மொத்தம் 1,604 பேர் வாக்களித்தனர். எனினும் தபால் வாக்குச் சீட்டுகள் தாமதமாக சென்றதால் வெளியூர்களிலிருந்த பலர் வாக்களிக்க முடியாமல் போன நிலையில் தேர்தலை எதிர்த்து 62 உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனால் வாக்ககளை எண்ணுவதை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஒகஸ்ட் 2 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. அப்போது வாக்குகளை எண்ணுவது பற்றிய முடிவை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நடிகர் சங்க பணிகள் முடங்கியுள்ளன. சம்பள பிரச்சினை குறித்து நடிகர், நடிகைகளால் சங்கத்தில் முறைப்பாடு செய்ய முடியவில்லை என்று மூத்த நடிகர் ஒருவர் கூறினார். இதன்காரணமாக நடிகர் சங்க கட்டட வேலையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றமை குறிப்பித்தக்கது.