விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்களில் முதல்நாள் முதல்காட்சி பார்ப்பதற்கு எந்த படத்தை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளித்துள்ளார்.
தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் நடிகர் விகரமின் மகன் துருவ் விக்ரம். வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். துருவ்க்கு ஜோடியாக மொழி நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரிராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ராதான் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு துருவ் விக்ரம் பேட்டியளித்துள்ளார். அதில், தனுஷ் தனக்கு பிடித்த நடிகர் என்று கூறியிருக்கும் அவர், தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வருடம், எந்தப் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த துருவ், பேட்ட படத்துக்காக காத்திருப்பதாகவும், கண்டிப்பாக முதல்நாள் முதல்காட்சி பார்த்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.