`நாதஸ்வரம்’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர். பன்னிரண்டாம் வகுப்பினை முடிக்கும் தருவாயில் சீரியல் வாய்ப்பு கிடைக்க அதை இறுகப் பற்றிக்கொண்டவர். `நாதஸ்வரம்’ சீரியலில் அமைதியான பெண்ணாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர், `வாணி ராணி’ சீரியலில் வில்லியாக வெளுத்துக் கட்டினார். இவர் முகத்துக்கு நெகட்டிவ் ரோல் செட்டாகுமா என்கிற கேள்வியை உடைத்துக் காட்டியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.
“ஹாய்.. இப்போ `வாணி ராணி’ சீரியல் முடிச்சிட்டு எனக்கு நானே ஒரு பிரேக் எடுத்திருக்கேன். சீரியல் முடிஞ்ச உடனே அடுத்தடுத்து பல சேனல்களிலிருந்து வாய்ப்பு வந்துச்சு. கொஞ்சம் வெயிட் லாஸ் பண்ணணும். அப்புறம் தொடர்ந்து ஒரே மாதிரியே ஓடிட்டு இருக்கிறது எனக்குப் பிடிக்காது. அதனால, கொஞ்சம் பிரேக். நான் நடிச்சிட்டு இருக்கும்போதே காலேஜ்லேயும் வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்த வேலையைத்தான் இப்போ தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன்” என்றவரிடம் அவருடைய ரீசன்ட் லுக் குறித்துக் கேட்டோம்.
“எப்பவும் லாங் ஹேர்ல இருக்கிறது எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. ஏதாவது சேஞ்ச் காட்டலாமேன்னு தோணுச்சு. அதனால, இப்போ ஹேர் கட் பண்ணியிருக்கேன். ரொம்ப ஷார்ட்டா கட் பண்ணிட்டேன். நான் முடியை கட் பண்ணினது என்னை விட எங்க அம்மாவுக்கும், என் ஃபேமிலிக்கும் தான் ஷாக்! இப்போ வரை அம்மா திட்டிட்டுதான் இருக்காங்க” என்றவர் அதிலிருக்கும் சென்டிமென்ட்டான விஷயத்தை நம்மிடையே பகிர்ந்தார்.
`நாதஸ்வரம்’ சீரியலுக்குள்ளே வரும்போது நான் ப்ளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் எனக்கு லாங் ஹேர் கிடையாது. ஆரம்பத்தில் சீரியலுக்காக விக் வைச்சிகிட்டு நடிச்சேன். சீரியல் முடியுற நேரம் அந்த விக்கை விடவும் என் முடி நீளமா வளர்ந்துடுச்சு. அந்த சீரியல் முடிஞ்சதும் என் ஹேரை கட் பண்ணிக்கிட்டேன். ரொம்ப ஷார்ட்டா இல்ல ஓரளவு ஷார்ட்டா கட் பண்ணிக்கிட்டேன். கட் பண்ண முடியை பத்திரமா கொண்டு வந்து சவுரி செஞ்சு வைச்சுக்கிட்டேன். இப்போ அதே மாதிரி `வாணி ராணி’ சீரியல் முடிஞ்சதும் மறுபடி முடி கட் பண்ணிகிட்டேன். இந்த முடியையும் பத்திரமா சவுரி செஞ்சு வைச்சிருக்கேன். நான் நடிக்கிற சீரியல் முடிஞ்சதும் ஹேர் கட் பண்ணிக்கிறது என் சென்டிமென்ட்!” எனப் புன்னகைக்கிறார்.
“வீட்டிலிருக்கும்போதும் சரி, ஃப்ரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போகும்போதும் சரி மார்டன் டிரெஸ்தான் போட்டுப் போவேன். எனக்கு மார்டன் லுக்தான் பிடிக்கும். ஆனா, கேமராவில் என் முகத்தைப் பார்க்கும்போது ஹோம்லி லுக் பக்காவா இருக்கும். அதனால ஹோம்லி கதாபாத்திரத்துக்கு முன்னுரிமை தருவேன். மார்டனா நடிக்கிறது பிரச்னை இல்ல. ஆனா, அதையும் தாண்டிப் போயிட வேண்டாம்னு நினைக்கிறேன். சீரியலில் ஹோம்லி கதாபாத்திரங்கள் அமையுறதுனால அதுல நடிக்கிறேன். படங்களிலும் குடும்பக் கதை அமைஞ்சா நிச்சயம் நடிக்கத் தயார்தான்! சொல்ல மறந்துட்டேன். எனக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்கணும்னு ஆசை!”என்றவர் சில மணித்துளி வெட்கச் சாரலுக்குப் பின் தொடர்ந்தார்.
“என் முகத்தைப் பார்த்துட்டுப் பலரும் எனக்கு நெகட்டிவ் செட்டாகாதுன்னு சொன்னாங்க. `வாணி ராணி’யில் நடிச்சதுக்கு அப்புறம் எல்லோரும் `பரவாயில்ல.. உன் முகத்துக்கு நெகட்டிவ் செட்டாகுது!’ன்னு சொன்னாங்க. இதுதான் இவங்களுக்கு செட்டாகும்னு யாரும் சொல்லிடக் கூடாது. நமக்கு என்ன வரும், வராதுன்னு நாமதான் முடிவு பண்ணணும். சின்ன வயசுல இருந்தே மல்டி டாஸ்கிங்ல ஒர்க் பண்றது எனக்குப் பிடிச்ச விஷயம்” என்றவர் சீக்கிரமே ரீ- என்ட்ரி கொடுப்பாராம்!