‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெற்றது.
எதிர்வரும் ஒகஸ்ட் 15ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் விழாவில் படக் குழுவினர்களுடன் திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
இயக்குநர்கள் அகத்தியன், S.D.சபா, எழில், லெனின் பாரதி, ராம் பிரகாஷ், தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு, படக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், ”நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் நாங்கள் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் ‘வெண்ணிலா கபடி குழு’ எடுத்தேன். இந்தப் படத்தில் என் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கின்றது. இப்படம் எங்களுடைய குடும்ப படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சசிகுமார் கூறும்போது, ”இந்தக் ‘கென்னடி கிளப்’ படத்தின் கதாநாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள்தான் கதாநாயகர்கள். கபடி பயிற்சியாளர் செல்வமாகத்தான் நான் நடித்திருக்கின்றேன். கபடியில் வென்றால்தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்றுதான் கபடி வீரர்களும், வீராங்கனைகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காகவே இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
‘கென்னடி கிளப்’ இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி மற்றும் காயத்திரி நடித்துள்ள கபடிவிளையாட்டு திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தைசரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.