யூடியூப் தளத்தில் ‘கல்யாண வயசு’ பாடல் வீடியோ இப்போது காணக் கிடைக்கவில்லை. ரசிகர்கள் பலரும் இதற்கான காரணத்தை நெட்டில் தேடி ஆராய்ந்து வருகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் வெளியான ’கோலமாவு கோகிலா’ படத்தின் முதல் சிங்கிளாக ‘கல்யாண வயசு’ பாடல் வெளியானது. வெளியானதுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரல் ஹிட் ஆனது. குறிப்பாக இந்தப் பாடல் வீடியோவில் யோகி பாபுவின் நகைச்சுவையை பாராட்டாதவர்கள் குறைவ. 4 நாட்களில் 5.5 மில்லியன் பார்வைகளைக் கடந்த இந்தப் பாடல், காப்பி அடிக்கப்பட்டது என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. ஆனால், பாடலுக்கான அந்த தாளத்தை, தான் முறையாக வாங்கியே பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் விளக்கம் அளித்தார்.
கிட்டத்தட்ட 60 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிக்கப்பட்ட கல்யாண வயசு பாடல் வீடியோ சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ சேனலில் காணக் கிடைக்கவில்லை. அசல் பாடலின் உரிமையாளர்கள் காபிரைட் கோரியதால் தான் தற்போது இந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் உண்மையில், அனிருத் வாங்கியிருந்த தாளத்துக்கான யூடியூப் உரிமைக் காலம் தற்போது முடிந்துவிட்டதாலேயே அந்தப் பாடல் யூடியூபில் இல்லை. ஆனால் இன்னமும் ஐடியூன்ஸ் போன்ற தளங்களில் இந்தப் பாடல் கிடைக்கிறது. மேலும் இந்தப் பாடல் நீக்கப்படவோ, டெலிட் செய்யப்படவோ இல்லை. மாறாக, சேனல் உரிமையாளர்களான ஜீ மியூஸிக் சவுத்தினால் மறைக்கப்பட்டுள்ளது (hidden) என்பது உண்மை.
விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாடல் மீண்டும் காணக் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.