கள்ளக்காதலனோடு வைத்திருந்த தகாத உறவை கைவிட்டதால் காதலி மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தத்தை அடுத்த கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், பெங்களூருவில் தங்கி பெயிண்டராக வேலைப்பார்த்து வரும் இவர், நேற்று விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் காலை தனது மனைவி சுமதியுடன் இரு சக்கர வாகனத்தில் குடியாத்தத்திற்கு சென்றார்.
மோடிக்குப்பம் என்ற ஊருக்கு அருகே சென்ற போது,இரு சக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் அதி வேகமாக கார் ஒன்று மோதியது. இதில் சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மணிகண்டன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை சுற்றி வளைத்து தாக்கிய பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் ஓட்டி வந்த காரின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினரின் விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் சுமதியின் முன்னாள் காதலன் வசந்த் என்பதும் இது விபத்து அல்ல, திட்டமிட்ட படு கொலை என்பதும் தெரியவந்தது.
மணிகண்டன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால், வீட்டில் தனியாக வசித்து வந்த சுமதிக்கு
தேவையான உதவிகளை வசந்த் என்ற அவரது உறவுக்கார இளைஞன் செய்து கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
கணவர் மணிகண்டன் ஊரில் இல்லாத நேரம் வசந்துடன் காரில் சுற்றிய சுமதி, உல்லாசமாக இருந்துள்ளார்.. இவர்களது காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு தெரியவந்தது. அப்போது தனது தவறை உணர்ந்த சுமதி, கணவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரது அறிவுரையை ஏற்று காதலன் வசந்தை சந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வசந்த், மணிகண்டன் இல்லாதபோது சுமதியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். தொடர்ந்து வசந்த் காதல் தொல்லை கொடுத்து வந்ததால் சமதியை மணிகண்டன் பெங்களூருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டமிட்டா கிராமத்திற்கு தனது மனைவி சுமதியுடன் வந்த மணிகண்டனிடம் வசந்த் தகராறு செய்துள்ளான். அங்கிருந்தோர் சமரசம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை கணவன் , மனைவி இருவரும் ஜோடியாக இருசக்கரவாகனத்தில் செல்வதை கண்டு ஆத்திரமடைந்த வசந்த், இருவரையும் கார் ஏற்றிக் கொலை செய்யும் திட்டத்துடன் தனது காரில் பின் தொடர்ந்துள்ளார்.
மோடிக்குப்பம் என்ற பகுதியில் சென்ற போது அதி வேகத்தில் ஓட்டிச்சென்ற காரை இருசக்கர வாகனத்தின் மீதி பயங்கரமாக மோதியுள்ளான் வசந்த், இதில் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.