அமெரிக்காவில் நடிகையும், ஹாலிவுட் பட தயாரிப்பாளரின் மகளுமான லிரிக் மெக்ஹென்ரி அரை நிர்வாண கோலத்தில் சாலையோரம் அனாதையாக இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லிரிக் மெக்ஹென்ரி(26). ஹாலிவுட் பட தயாரிப்பாளரான டக் மெக்ஹென்ரியின் மகள். லிரிக் கடந்த 6ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை கொண்டாடிய 3 மணிநேரத்தில் அவர் இறந்துவிட்டார்.
லிரிக் மெக்ஹென்ரி நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் பகுதியில் இருக்கும் தெருவோரம் லிரிக் சுயநினைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காலை 5 மணி அளவில் லிரிக் தெருவோரம் அனாதையாக அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
லிரிக்கை பிரான்க்ஸ்-லெபனான் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லிரிக் பிணமாகக் கிடந்த இடத்தில் அவருக்கு அருகே ஒரு பையில் போதைப் பொருள் இருந்தது. அதனால் அவர் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
லிரிக் கர்ப்பமாக இருந்துள்ளார். லிரிக்கின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லிரிக் அவராக சாலையில் நடந்து சென்றபோது இறந்தாரா இல்லை ஏற்கனவே இறந்த லிரிக்கின் உடலை யாராவது அங்கு கொண்டு வந்து போட்டார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெவர்லி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பல ஹாலிவுட் பிரபலங்களின் பிள்ளைகளுக்கு லிரிக் நல்ல பழக்கமானவர். லிரிக் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருந்த என் மகள் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக தற்போதே கூறுவது சரி அல்ல. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிவு செய்யட்டும் என்று லிரிக்கின் தந்தை டக் தெரிவித்துள்ளார்.