‘சிறுத்தை’ படத்தை இயக்கி அறிமுகமானதன் மூலம் தமிழ் சினிமாவில் ‘சிறுத்தை’ சிவா என்று அழைக்கப்பட்டு வந்தவர் இயக்குனர் சிவா. இப்போது அஜித் சிவா என்று அழைக்கப்படும் அளவிற்கு அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கி முடித்துவிட்டார். ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ என நான்கு ‘வி’ படங்களில் ஒரு சுமார் வெற்றி, ஒரு சூப்பர் வெற்றி, ஒரு தோல்வி என அடுத்து வெளியாக உள்ள ‘விஸ்வாசம்’ படத்திலும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அஜித்தை வைத்து இதுவரை நான்கு படங்களை இயக்கியவர் என்ற பெயரைப் பெற்ற இயக்குனர் சரண் சாதனையை சமன் செய்துள்ளார் சிவா. சரண், அஜித் கூட்டணியில் ‘காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல்’ ஆகிய நான்கு படங்கள் வெளிவந்துள்ளன.
அஜித்தை ‘அமர்க்களம்’ படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றிய சரண், அடுத்து அஜித்துடன் அடுத்து ஐந்தாவாக படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தும் எட்டு வருடங்களாக அது நடக்காமலே இருக்கிறது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிவா, அடுத்து ஐந்தாவதாக அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அப்படி ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தால் சரணுடன் இருக்கும் சமனை மிஞ்சி சாதனை செய்துவிடுவார். அந்த வாய்ப்பு ‘விஸ்வாசம்’ வெற்றியைப் பொறுத்து வரும்.