பிரபல இயக்குநர் பா.இரஞ்சித்தின் தந்தை எம்.பாண்டுரங்கன் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 63.
ஓவியக் கலைஞரான பா.இரஞ்சித், ‘அட்ட கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் மீது திருப்பியவர், மூன்றாவதாக ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கபாலி’ படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து ‘காலா’ படத்தையும் இயக்குநர்.
படங்கள் இயக்குவதோடு தயாரிப்பு துறையிலும் ஈடுபட்டு வரும் இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது தனது அடுத்தப் பட பணிகளில் இரஞ்சித் ஈடுபட்டிருக்கிறார்.
இதற்கிடையே, அவரது தந்தை பாண்டுரங்கன் கடந்த சில மாதங்களாக உடல் நிலைபாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 12) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகில் உள்ள கீழ் கொண்டையார் காலணியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.