தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019-2021 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சென்னை கமலா திரையரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது இயக்குநர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநர் சங்கம் குறித்து பேசியதாவது, ”வருடத்திற்கு குறைந்தபட்சம் 50 பெரிய படங்கள் வெளியாகிறது. கண்டிப்பாக பெரிய பட இயக்குநர்கள் குறைந்தது ரூ.1 கோடி சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் இக்காலத்திற்கேற்ப குறைந்தபட்சம் தங்கள் சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் இயக்குநர் சங்கத்திற்கு கொடுத்தால் வருடத்திற்கு ரூ.50 லட்சம் சங்கத்திற்கு வருமானமாக கிடைக்கும்.
ஏனென்றால், நாம் எதாவது விழா கொண்டாடினால் அதற்கு ஏன் இவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று ஏளனம் செய்கின்றனர். முதலில் நம் சங்கத்திற்கு நாம் பணம் கொடுத்துவிட்டு பிறகு போதவில்லை என்றால் மற்றவரிடம் நன்கொடை கேட்பதில் தவறு இல்லை” என்று கூறினார்.
விழாவில் பங்கேற்ற இயக்குநர் பேரரசு பேசுகையில், ”இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதை விட தேர்தல் நடத்தியதைதான் நான் பெரிய வெற்றியாக பார்க்கிறேன். அதேசமயம் நம் சங்க உறுப்பினர்கள் மற்ற மொழியில் படங்கள் இயக்கினாலும் சங்கத்திற்கு 1 லட்ச ருபாய் கொடுக்கவேண்டும் என புதிய வேண்டுகோள் வைத்துக்கொள்கின்றேன்” என தெரிவித்தார்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும்.
இயக்குநர் விக்ரமன் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையில் சங்கத்தின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர் ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியில்லாத காரணத்தால் ஆர்.வி.உதயகுமார் தேர்வானார். இதேபோன்று பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.