பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னை துணிச்சலான பெண்ணாக பார்க்கிறார்கள். அயர்ன் லேடி என்றும் அழைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.
யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ஜாம்பி. புவன் நல்லான் இயக்கி உள்ளார். எம்.வசந்த், வி.முத்துக்குமார், பாலா அன்பு ஆகியோர் தயாரித்துள்ளனர். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது யாஷிகா ஆனந்த் கூறியதாவது:-
“ஜாம்பி படத்தில் மருத்துவ மாணவியாக வருகிறேன். நகைச்சுவை அம்சம் உள்ள படம். யோகிபாபு, சுதாகர், கோபி என்று நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கு இது முக்கிய படம். நான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். இதனால் படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து இருக்கிறேன்.
ரசிகர்களுக்கு கவர்ச்சி பிடிக்கிறது. இந்த படத்திலும் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக ஆடி இருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னை துணிச்சலான பெண்ணாக பார்க்கிறார்கள். தற்போது ஆரவ் மற்றும் மகத் படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் மற்ற நடிகைகளை நான் போட்டியாக பார்க்கவில்லை. எனக்கு நானேதான் போட்டி. நான் நிச்சயம் ஒரு நாள் அரசியலுக்கு வருவேன். பெண் உரிமைக்கான விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அஜித்குமார், சூர்யா ஆகியோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது. எனக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். எனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினார்கள்.” இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறினார்.







